திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் பொட்டல்புதூர் பகுதியில் சலவை மற்றும் அயனிங் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு அருகில் உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருமாறன் என்பவர் முத்துக்குமாரிடம் தனது துணிகளை அயனிங் செய்ய கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன் திருமாறன் தனது சட்டைகள் மற்றும் பேண்ட்களை அயனிங் செய்ய முத்துக்குமாரிடம் வழங்கி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து அந்த துணிகளுள் பேண்ட் ஒன்றை அயனிங் செய்த முத்துக்குமார் பாக்கெட்டில் கனமான பொருள் ஒன்று இருப்பதை உணர்ந்துள்ளார். அதை வெளிய எடுத்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கத்தை கத்தையாக இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த பணத்தை தனது கடையின் டாயரில் பேப்பர் சுற்றி பத்திரமாக எடுத்து வைத்தார்.
மறுநாள் வழக்கம் போல் திருமாறன் துணிகளை வாங்க வந்தபோது, அயனிங் செய்வதற்கான கூலியை முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது முத்துக்குமார் பேப்பரால் சுற்றப்பட்டு டாயரில் வைத்திருந்த பணக் கட்டுகளை கொடுத்துள்ளார். என்ன இது? என திருமாறன் கேட்டபோது இந்த பணம் உங்கள் பேண்ட் பையில் இருந்தது. இது உங்கள் பணம் என்று கூறியுள்ளார். அதுவரை திருமாறன் தான் வைத்திருந்த பணம் தொலைந்து போனதை அறியாததால், அந்த பணம் அவருடையதுதான் என உறுதி செய்துகொண்டு அதை முத்துக்குமாரிடம் இருந்து பெற்று சென்றனர்.
இந்நிலையில், முத்துக்குமாரின் நேர்மையான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் சமூக ஆர்வலரான திருமாறன், காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தனுடன் இணைந்து முத்துக்குமாரின் செயலுக்காக, அவருக்கு சால்வை அணிவித்து, நேர்மையை பாராட்டி அவருக்கு 2025ஆம் ஆண்டின் "கர்மயோகி காந்தி" விருது மற்றும் "பாண்டித்யா" விருது வழங்கினர்.
இதையும் படிங்க: பொங்கலோ..பொங்கல்.. கிராமத்து பாணியில் பொங்கல் கொண்டாடிய சென்னை மழலைகள்!
இது குறித்து முத்துக்குமார் கூறும் போது, “பல ஆண்டுகளாக சலவைத் தொழில் ஈடுபட்டு வருகிறேன். பொதுமக்கள் மறதியால் இது போன்று பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை துணியில் வைத்து விடுகின்றனர். எனக்கு அந்த பொருட்கள் மீது ஆசை இல்லை. ஏன்னென்றால் அவை உரிமையாளருக்கு சொந்தமானது. அதனால், நான் அதை அவர்களிடமே ஒப்படைத்து விடுவேன். இது போன்ற ஏற்கனவே பலரின் பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை திரும்ப கொடுத்துள்ளேன். முதலில் நான் கேரளாவில் சலகை தொழில் செய்து வந்தேன். அங்கும் மறதியில் மக்கள் பணத்தை துணிக்களுக்கு வைத்தபடி சலவைக்கு கொடுத்துள்ளனர் அங்கு ரூ.15,000, ரூ.25,000 திருப்பி கொடுத்துள்ளேன். அதேபோல் தான் சாரும் மறந்து தனது பேண்ட் பையில் பணத்தை வைத்திருந்தார். அதை அவரிடம் ஒப்படைத்தேன்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இதுகுறித்து திருமாறன் கூறும்போது, “முத்துக்குமார் துணிகளில் அழுக்கை மட்டும் வெளுக்கவில்லை, மக்களின் மனங்களையும் வெளுத்துள்ளார். இந்த காலத்தில் இப்படி அடுத்தவர் பணத்தின் மீது ஆசைப்படமால், உரியவரிடம் ஒப்படைத்துள்ளர். நான் அந்த பணத்தை விழுப்புரம் வெள்ள நிவாரண பணிகளுக்காக வைத்திருந்தேன். வாஷிங் மிஷனில் அந்த துணியை துவைத்ததால் துவைக்கம்போதும் இந்த பணம் இருந்ததை கண்டறிவில்லை. அப்படியே எடுத்து வந்து அந்த பேண்ட்டை அயன் செய்வதற்காக கொடுத்து விட்டேன். இது போன்று நேர்மையானவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இவரை மகாத்மா காந்தி பார்த்திருந்தால் கட்டியணைத்து, பாரட்டியிருப்பார்” என்றார்.