பெங்களூரு :கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வத் நகராட்சி கவுன்சிலர் நிரஞ்சன் ஹயர்மத் என்பவரின் மகள் நேஹா ஹயர்மத். ஹூப்ளியில் உள்ள பி.வி.பூமரடி என்ற கலை கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நேஹா, இளைஞர் ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்டு கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெலகவி மாவட்டம் சவுதாத்தி பகுதியைச் சேர்ந்த பயாஸ் கோண்டுநாயக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தற்போது பயாஸ் கோண்டுநாயக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து தும்குரு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, நேஹா - பயாஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இதனிடையே நேஹா வேறு இளைஞரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அதை தெரிந்து கொண்ட பயாஸ் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
அதேநேரம் நேஹாவின் தந்தையும் காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன் ஹயர்மத், தனது மகளை நீண்ட நாட்களாக பயாஸ் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது மகள் இணங்காத நிலையில் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இரு வேறு கருத்துகள் வேகமாக பரவிய நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவுக்கு எதிராக கண்டனம் எழுந்தது.