நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவக்கம்! - UNION BUDGET 2025 TO 2026
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று (ஜன.31) துவங்குகிறது.


Published : Jan 31, 2025, 9:18 AM IST
புதுடெல்லி: 2025-26ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வெள்ளிக்கிழமை இன்று (ஜன.31) துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றவுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடும் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிதிநிலை ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.1) 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதாவது, 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், திங்கட்கிழமை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெறும். அதாவது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக மக்களவை தற்காலிகமாக ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளது. அதே நேரம், மாநிலங்களவை விவாதத்திற்காக மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 6ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் 9 அமர்வுகளுடன் பிப்ரவரி 13ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (ஜன.30) அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதில், பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடையும் முதற்கட்ட கூட்டத்தொடர், பட்ஜெட் திட்டங்கள் ஆராயப்பட்டு மீண்டும் இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 10ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.
நிதியமைச்சர் சந்திக்க உள்ள சவால்கள்:
2025ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.4 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பொருளாதார வளர்ச்சி குறைதல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் நுகர்வு தேவை குறைதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை இந்த பட்ஜெட் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் தொற்றுநோய் (கரோனா) உட்பட பல கடினமான கட்டங்களின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை வழி நடத்திய நிர்மலா சீதாராமன், மீண்டும் பொருளாதார மந்தநிலை, நுகர்வு மிதமான தன்மை, தேக்கமடைந்த தனியார் முதலீடு மற்றும் நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மாதத் தொடக்கடத்திலேயே, அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 86.7 ஆகக் குறைந்தது.