கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், '' இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்து இருப்பதால் இங்கு இருக்கக் கூடிய பூங்காவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பூங்காவில் இன்றைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது. குறைந்தபட்சம் இங்கு இருக்கக் கூடிய மரத்தில் இருந்து விழுந்து இருக்கக் கூடிய சருகுங்கள், இலைகள் இவற்றையெல்லாம் அகற்றி கொடுக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய மன நிலை கூட இந்த மாநகராட்சிக்கு இல்லாதது ரொம்ப வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கோ கட்சி சார்ந்ததோ அல்ல. இந்த பகுதியைச் சேர்ந்த அத்தனை மக்களுக்கும் பொதுவான நிகழ்ச்சி. இதுபோன்ற தவறுகளை மாநகராட்சி எதிர் காலத்தில் செய்யக் கூடாது என்பது என்னுடைய கருத்து. எந்த ஒரு விஷயத்தை புதிதாகக் கொண்டு வந்தாலும் அதற்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில், காமராஜருடைய கால கட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கக் கூடிய அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்க கூடிய தனியார் பள்ளிகளை யார் நடத்துகிறார்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் தி.மு.க மட்டும் கிடையாது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி யார்? யார்? பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்? அந்தப் பள்ளிகளில் இந்தி மொழி கற்று கொடுக்கின்றார்களா? இல்லையா ? இந்த விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் எத்தனை மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லாமல் போனது? இன்றைய காலத்தில் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தமிழ்நாட்டு ஏழை குடும்பங்களை வஞ்சிக்கக் கூடிய வகையில் எதற்காக இவர்கள் தனியார் பள்ளிக் கூடங்களை கொண்டு வந்தார்கள்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
என்னை பொருத்தவரை தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிப்பதற்கு எந்த கொம்பன் வந்தாலும் விட மாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் ? வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், '' மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அவரின் பேச்சை ஆணவ பேச்சாக நான் பார்க்கிறேன். இது முறையற்ற பேச்சாக இருக்கிறது'' எனக்கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்ட இருப்பதாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன், '' பரவாயில்லை என்றுமே அவர்கள் வெள்ளையை பார்த்ததே கிடையாது. என்றுமே அவர்கள் மனம், செயல் அனைத்துமே கருப்பு தான். எந்த ஒரு விஷயத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது. அனைவருக்கும் உணர்வு என்று இருக்கிறது. அந்த உணர்வுகளுக்கு நீங்கள் வழிவிடவில்லை என்றால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என தெரிவித்தார்.
மேலும், கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும் தமிழ்நாட்டில் மூன்று பாஜக அலுவலகங்கள் திறக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.