சென்னை: நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே கொடுத்த வாக்குறுதிகளை 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.
இதையடுத்து, அரசு அலுவலக சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தவிட்டிருந்தார். அந்த குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து, அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேற்று (பிப்.24) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு அரசு தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனாலும், அரசு ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடத்தப்படும் என்றுஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, பல்வேறு அரசுத் துரைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டா ஜியோ அமைப்பினர் 500 க்கும் மேற்பட்டோர், சென்னை எழிலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில், "எங்களது உழைப்பு, தியாகத்தால் தமிழ்நாடு மக்களை மேம்பட வைக்கிறோம். அமைச்சர்களுடன் நேற்று இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்களது அனைத்து கோரிக்கைகளையும் எடுத்து கூறினோம். இதனையடுத்து, அமைச்சர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்தாலோசனை செய்துவிட்டு மீண்டும் எங்களை சந்திக்கிறோம் என்று கூறினர்.
அதன்படி, அமைச்சர்கள் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், எங்களது கோரிக்கைகளை ஏற்க முதலமைச்சர் இசைவு தெரிவித்ததாக தெரியவில்லை. அதனால்தான் அமைச்சர்களும் எங்களை மீண்டும் சந்திக்க மறுத்துவிட்டனர் என கருதுகிறோம். இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே, கொடுத்த வாக்குறுதிகளை 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2026 ஆம் தேர்தலில் ஏமாறுவீர்கள்:
தமிழ்நாடு இன்று கொந்தளிப்பில் உள்ளது. எங்களை ஏமாற்றினால் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக ஏமாறும். நாங்கள் 4 ஆண்டு காலம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். தற்போது அரசு 4 வார அவகாசம் கேட்பது எங்கள் போராட்ட உணர்வை மழுங்கடித்து, எங்களை பிளவுபடுத்தும் செயல். ஆதாயம் பெறுவதற்காக இந்த தவறான போக்கை அரசு கடைபிடித்து வருகிறது.
எங்களை ஏமாற்ற தொடங்கிவிட்டீர்கள் என்பதை அரசு ஊழியர்கள் புரிந்துகொண்டுள்ளனர். 2026 இல் எங்கள் பணியை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துவோம். கோரிகைகளை ஏற்க கால அவகாசம் கேட்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அடுத்தகட்டமாக, முழுநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.” என்று மாயவன் தெரிவித்துள்ளார்.