ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக, தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'அனைத்து மாணவர் கூட்டமைப்பு' சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தி கட்டாயம் என்பதை ஏற்க முடியாது என்றும் முடிந்தால் என்னை மீறி இந்தியை திணித்து காட்டுங்கள் என மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலந்தாய்வு கூட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது, "மொழி குறித்த புரிதல் பாஜவிற்கு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியை திணிக்கின்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நடிக்கின்றனர். நாங்கள் தமிழை காக்க துடித்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், மும்மொழிக் கொள்கை தீவிரமாகும்போது திமுக அரசு அதை எதிர்ப்பது போல நாடகமாடுகிறது.
உணவு, உடை, மொழி என்பது தனிமனிதனின் விருப்பம். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித் துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியை கூட கேட்டு பெற முடியாமல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு என்ன பயன்," என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
அப்பாவிடம் கேளுங்கள்:
தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "இதுகுறித்து அப்பாவிடம் (முதல்வர் ஸ்டாலின்) தான் கேட்க வேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் முதலமைச்சர் ஆட்சி செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் மனதால் அப்பா என்று அழைக்கும் உணர்வு வரும்." என்றார்.
தொடர்ந்து, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதக கட்சியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, “ நாதக கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள், முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அவர்களின் சொந்த விருப்பம். யாரையும் விளங்கு போட்டு இழுத்து பிடித்து வைக்கும் இயக்கம் நாதக இல்லை. இது என்னுடைய கட்சிப் பிரச்சனை; நாட்டு பிரச்சனை கிடையாது.” என்றார்.
முடிந்தால் இந்தியை திணித்து பாருங்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியை வலுகட்டாயமாக திணிப்பதை தடுக்க வேண்டும். என்னை மீறி இந்தியை திணித்து காட்டுங்கள்." என்று மத்திய அரசுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.