கோயம்புத்தூர்: கோவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்பதற்காக அருகருகே பாஜக மற்றும் திமுக கட்சிக்கொடிகள் நடப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நாளை (பிப்.26) பாஜகவின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கோவையில் முகாமிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமித் ஷா கலந்து கொண்டு பாஜக அலுவலகத்தை திறந்து வைப்பதுடன் நாளை இரவு ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்க உள்ளார்.
இதற்காக மத்திய உள்துறை அமித் ஷா இன்று விமானம் மூலம் கோவை வருகிறார். அதேவேளை சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக கார் மூலம் அங்கிருந்து கோவை விமான நிலையம் வருகிறார்.

இதையும் படிங்க: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரே நேரத்தில் இரு தலைவர்களும் விமான நிலையத்திற்கு வருவதால் அங்கு சந்திப்பு இருக்க கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்பதற்காக விமான நிலைய சாலையில் அருகருகே பாஜக மற்றும் திமுக கட்சிக்கொடிகள் நடப்பட்டுள்ளன. இதனால் விமான நிலைய சாலையில் இரு தலைவர்களையும் வரவேற்க திரண்டு வரும் பாஜக மற்றும் திமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று பாமக கௌரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி இல்ல திருமண வரவேற்பு விழா நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார். அதே போல ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சேலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.