வாசனைக்காக சில மலர்கள், அழகுக்காக சில மலர்கள், மருத்துவ குணங்களுக்காக சில மலர்கள் மற்றும் பூஜை செய்வதற்காக சில மலர்கள் என நம் வீட்டில் வகை வகையான மலர்களை வளர்ப்போம். ஆனால், இந்த அனைத்து குணங்களும் உள்ள ஒரே பூவான சங்குப்பூ உங்கள் வீட்டில் உள்ளதா? சிவபெருமானுக்கு உகந்த சங்குப்பூவை எளிமையாக வீட்டில் எப்படி வளர்க்கலாம் என்பதையும், இந்த செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சங்குப்பூ வளர்க்கும் முறை:
- நர்சரிகளிலிருந்து வாங்கி வந்த சங்குப்பூ விதைகள் அல்லது உங்களிடம் உள்ள சங்குப்பூ விதையை விதைப்பதற்கு முன்பு ஒரு நாள் முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். நன்கு காய்ந்து, அடர் நிறத்தில் உள்ள விதைகளை நீரில் ஊற வைத்து நடுவு செய்தால் செடி நன்கு துளிர் விட்டு வளரும்.
- சங்குப்பூ கொடி அனைத்து விதமான மண்கலவையிலும் எளிதில் வளரும் என்பதால் க்ரோ பாக் அல்லது மண் தொட்டியில் மண்ணைப்போட்டு நிரப்பிக்கொள்ளவும். சாணி அல்லது காய்கறி உரங்களை மண்ணில் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர், நாம் எடுத்துவைத்துள்ள நல்ல தரமான விதைகளை, தொட்டியில் உள்ள மண்ணை சிறிது தோண்டி அதில் விதைகளை போட்டு மூடவும். தொட்டியில் நீர் தேங்காதவாறு தினசரி மண்ணில் நீர் தெளித்து விட்டால் போதுமானது.

- சங்குப்பூ விதைத்த 10 நாட்களில் முளைத்து வர ஆரம்பித்து, 15 நாட்களில் கொடி படர ஆரம்பிக்க தொடங்கிவிடும். கொடி சிறப்பாக வளர்வதற்கு, கொடி பற்றி ஏற உதவும் விதமாக பந்தல் அமைக்க வேண்டும்.
- 30 நாட்களில் சங்குப்பூ நன்றாக படர்ந்து, விதை வைத்த 40 நாட்களில் கண்ணக்கவரும் பூக்கள் பூக்கத்தொடங்கும். இந்த முறையே நீல நிற சங்குப்பூ மற்றும் வெள்ளைச்சங்குப்பூ இரண்டிற்கும் பொருந்தும்.
சங்குப்பூ செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- பூவில் உள்ள நீல நிறம் மன நிம்மதியை தரக்கூடியது. அதனால், வீட்டில் வளர்க்கும் இந்த செடியில் உள்ள பூக்களை நாம் அடிக்கடி பார்ப்பதால் கோபம் குறையக்கூடும்.
- செடி இருக்கும் இடத்தில் உள்ள வெப்பத்தை குறைத்து குளுமையாக மாற்றும் தன்மை இந்த சங்குப்பூ செடியில் உள்ள இலைகளுக்கும் பூக்களுக்கும் இயற்கையாகவே உள்ளது. அதனால், வீட்டு வாசலில் சங்குப்பூ வளர்ப்பதன் மூலம் வெயில் காலத்தில் வீடு குளுமையாக இருக்கும்.
- நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன், இந்த பூவை கையில் எடுத்து சென்றாலோ அல்லது பார்த்து விட்டு சென்றாலோ, சென்ற காரியம் வெற்றியடையும் என தாய்லாந்து நாட்டு மக்களால் நம்பப்படுகிறது.
- இந்த செடியை வீட்டு வாசலில் வளர்ப்பதால், இந்த பூவின் வாசத்திற்கு பூச்சிகளோ அல்லது கொசுக்கள் வராது.
- சங்குப்பூவில் பட்டுவரும் காற்றை சுவாசித்தால் மூச்சுத்தினறல், சுவாசக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சங்குப்பூ மருத்துவ குணங்கள்:
- சங்குப்பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் சருமத்தை பளபளப்பாக்கவும், எளிதில் வயதடையும் தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது.
- உலர்ந்த சங்குப்பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை விலை தந்து பல நாடுகளில் வாங்கப்படுகிறது.
- சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்தும் தன்மையை கொண்டது. இவை, சருமத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தேமலைக் குணமாக்கும் குணத்தை கொண்டுள்ளது.
