திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நெக்னாமலை எனும் மலைகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு நேற்று (பிப்ரவரி 24) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மலைகிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் மலைவழிப் பாதையில் நடந்தே வந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்தாகத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கோவிந்தனின் உறவினர்கள், அவரது உடலை நெக்னாமலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் மேற்கொண்டு நள்ளிரவில் மலை அடிவாரத்தில் கோவிந்தனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.
தொடர்ந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் 7 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைச்சாலையிலேயே ஆண்கள், பெண்கள் என பலர் உடலை சுமந்து சென்றுள்ளனர். நெக்னாமலை மலைகிராமத்திற்கு சாலை வசதி வேண்டி மலைகிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி, மலைகிராம மக்களே, தற்காலிகமாக மண் சாலை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடும் மழை மற்றும் இயற்கை சீற்றத்தினால், மலைச்சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக இருப்பதாகவும், மலைக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராம மக்களின் அவசர தேவைக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கிய நிலையில், தற்போது மலைச்சாலை மிகவும் மோசமாக உள்ளதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மலைக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நெக்னாமலை மலைக்கிராமத்திற்கு சாலை வேண்டி அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும், ஆட்சியர் முதல் அமைச்சர் வரை ஆய்வு செய்தும், இதுவரையில் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொத்து பிரச்சனையால் தாய் மாமாவை வெட்டியை இளைஞர் - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று உடல்நலக்குறைவால், முதியவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆலங்காயம் பகுதியில் மருந்துகடையின் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முதியவர் மருத்துவமனைக்கு சென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசியிடம் கேட்ட போது, ”நெக்னாமலை அடிவாரத்திலிருந்து வனத்துறையினரின் ஒப்புதலுடன், 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க அரசாங்கத்திடம் நிதி கேட்டுள்ளதாகவும், நிதி வந்தவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.