உத்தர பிரதேசம்:18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நல்ல நேரம் குறித்து கொடுத்ததில் பெயர் பெற்றவருமான பிரமாண சமுதாய உறுப்பினருமான பண்டிட் கணேஸ்வர் சாஸ்திரியும் உடனிருந்தார். இது தவிர மத்திய அமைச்சார்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் இருந்தனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் காசியுடனான தனது உறவு அற்புதமானது, பிரிக்க முடியாதது, ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று தான் தன்னால் சொல்ல முடியும் என்று பதிவிட்டுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள தசாஷ்வமேத் காட் மற்றூம் கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து வாரணாசியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணியில் ஈடுபட்டவாறு பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வேட்புமனுத் தாக்கலின் போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான டி.டி.பி தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி) தேசிய தலைவர் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பிரபுல் படேல், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண்,
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, சுஹேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா, உத்திர பிரதேச அமைச்சரும் நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், பசுபதி குமார் பராஸ், பூபேந்திர சவுத்ரி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் முடிவில் ஒட்டுமொத்தமாக 66.71 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த மே 7ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று (மே.13) ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 4வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இதையும் படிங்க:"74 வயதில் மோடி ஆட்சியில் இருப்பதில் மிகப்பெரிய சதி இருக்கிறது" - எம்.பி மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு! - Manickam Tagore MP