டெல்லி:குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், மூன்று மாநில ஆளுநர்களை மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கேரளாவை சேர்ந்த கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1979 பிரிவை சேர்ந்த குனியில் கைலாசநாதன், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது கடந்த 2013-14 ஆம் ஆண்டில் மோடியின் தலைமை முதன்மைச் செயலாளராக குனியில் கைலாசநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்து கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அந்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பஞ்சாப் புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.