டெல்லி:18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஜூன்.4) நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.
ஆட்சி அமைப்பது குறித்து இரண்டு கூட்டணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த பாஜகவுக்கு போதுமான இடங்கள் இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கிறது பாஜக. ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம், மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான 17வது மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றுது. காலை 11.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஆட்சியை கலைப்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஜூன் 16ஆம் தேதியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தொடரும் படி கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.