டெல்லி:நீட் தேர்வில் முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மக்களவை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், கல்வி மையங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை மீட்கப்படும் வரை, வினாத்தாள் கசிவு தடுக்கப்படாது என்றார். உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காஸா நாடுகளுக்கு இடையேயான போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆனால், நீட் வினாத்தாள் கசிவதை பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லையா அல்லது அவர் அதனை விரும்பவில்லையா என்று ராகுல் காந்தி கூறினார்.
ஜோடோ யாத்திரை நடைப்பயணத்தின் போது பலரும் இந்த தேர்வு முறைகேடுகள் குறித்து தன்னிடம் புகார் அளித்ததாக கூறினார். மேலும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல் பற்றிக் குறிப்பிட்ட ராகுல் காந்தி வியாபம் ஊழல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நீட் முறைகேடாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.