டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று (ஜூன்.24) காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற விருப்பம், அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மீது கொண்டிருந்த மக்களின் நம்பிக்கையின் காரணமாக மூன்றவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதாக கூறினார்.
அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் மற்றும் எண்ணங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக இந்த அரசு இருக்கும் என்றார். சிறந்த இந்தியா, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்த அரசு தொடர்ந்து பயணிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு நாளையுடன் (ஜூன்.25) 50 ஆண்டுகளாவதாக கூறிய பிரதமர் மோடி, அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டு இந்திய ஜனநாயகத்தின் கரும் புள்ளி எமர்ஜென்சி என்றும் கூறினார்.
2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் திட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதகாவு, ஆனால் அதற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போதைய நிலை உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.