புதுடெல்லி:விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "வேளாண்மை கூலித் தொழிலாளர்களை விடவும் விவசாயிகளின் வருவாய் அதிகமாக இருக்கிறது. எனினும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டும் உர மானியத்தில் பற்றாக்குறை இருக்காது. அதே போல வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும், விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைப்பது உள்ளிட்டவற்றில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,"என்றார்.
இந்தியா ஜனநாயகத்தின் தாய்:இதனிடையே மாநிலங்களவையில் இன்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, "நமது அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அரசியல் நிர்ணயசபையின் உறுப்பினர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டிருக்கிறது.
அரசியலமைப்பின் சிற்பிகளுக்கு இது ஒரு தேசம் அல்ல என்று தெரியும். இந்த தேசமானது எப்போதுமே பெரிய ஜனநாயக நாடு மட்டுமன்றி, ஜனநாயகத்தின் தாய் ஆக உள்ளது. இந்திய நெறிமுறைகளின்படி, ஜனநாயகம் என்பது சுதந்திரம், ஏற்றுக்கொள்ளுதல், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது, குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்த அனுமதிக்கிறது,"என்றார். முன்னதாக பிரபல தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துகள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற வாசகங்களைக் கொண்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்தார். அவரைப் போலவே இதர காங்கிரஸ் எம்பிக்களும் இதே போன்ற கைப்பைகளை வைத்திருந்தனர்.
சமூக சகிப்புத்தன்மையை மீறியது: இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "ஒன்றே ஒன்று என்பது, அங்கு வேறு ஒருவருக்கும் இடம் இல்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சமூக சகிப்புத்தன்மையை மீறியதாகும். ஒன்று என்பது தனிநபர்களிடம் ஈகோவை ஏற்படுத்துகிறது. அதிகார மையத்தில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துகிறது,"என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்த தேசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ஒரு கட்சிக்கானதோ அல்லது வேறு ஏதேனும் தனிநபர்களுக்கானதோ அல்ல. இது இந்த நாட்டுக்கானது,"என்றார்.