புதுடெல்லி:இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் அரசியல் சட்டத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
விவாதத்தை தொடங்கி வைத்துப்பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,"இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகள் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி எழுதி உள்ளன. ஆனால், இந்தியா மட்டுமே முக்கியமான அம்சங்களை இழக்காமால் திருத்தங்கள் வாயிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று தொடர்ந்து பின்பற்றி வருகிறது. நேரு ஆட்சி செய்தபோது அவரை விமர்சித்த கவிஞர் மஜ்ரூஹ் சுல்தானூரி, நடிகர் பால்ராஜ் சாஹ்னி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் காங்கிரஸ் முதல் திருத்தத்தை மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கில் கம்யூனிஸ்ட் பத்திரிகை கிராஸ் ரோட்ஸ், ஆர்எஸ்எஸ் பத்திரிகை ஆர்கனைஸர் ஆகியவற்றுக்கு ஆதரவாக 1950ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பலனளிக்கும் வகையில் சந்திப்பு...இலங்கை அதிபரின் எக்ஸ் பதிவு!
எனவே, காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து அதனை தவறாகப் பயன்படுத்தியது. காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே காங்கிரஸ் சட்டத்திருத்தம் மேற்கொண்டது,"என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தனது உரையைத் தொடர்நதார்.
"மகாராஷ்டிராவில் ஜிஎஸ்டியின் சில அம்சங்களை காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது ஜிஎஸ்டி தொடர்பான திருத்தத்தை மேற்கொள்ளவில்லை," என்றார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், "இந்த விஷயத்தில் மத்திய நிதி அமைச்சர் பொய் சொல்கிறார்," என்று கூறினார். இதற்கு உடனடியாக பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "நான் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. பொய்யான காரணங்களைக் கூறி குற்றம் சாட்டுவது காங்கிரஸ் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இதற்காக ஜெயராம் ரமேஷ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,"என்றார்.