டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதல் இரண்டு நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர், நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதற்காக இன்று அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு குளறுபடி குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தனர். அப்போது பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டியதென்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமே முக்கியமானது. அதேநேரம், இதுதொடர்பாக மிக ஆழமாக அவையில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், “நீங்கள் (எதிர்கட்சிகள்) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் விவாதிக்கலாம். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு பட்டியலில் உள்ளது” எனத் தெரிவித்தார்.