ஹைதராபாத்: மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உளவியல் போர் தொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், நாட்டில் மாவோயிஸ்ட்டுகளின் கோட்டையாகத் திகழும் அபுஜஹமத்தை ஊடுருவும் நோக்கில், சிறப்பான உத்திகளுடன் பல முன்னோக்கி இயக்க தளங்களை (Forward Operating Bases) அமைத்து, தண்டகாரண்யாவை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஸ்தார், பிஜாப்பூர், தண்டேவாடா, கான்கேர், கொண்டகான், நாராயணபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த பஸ்தார் பிரிவிலேயே நடந்துள்ளன. ஆகவே, அந்த பஸ்தார் பிரிவு பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஆபரேஷன் ககர் (Operation Kagar) என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதக் காவல் படையின் (Central Armed Police Forces) பிரிவுகள் சத்தீஸ்கரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், ஒடிசாவில் இருந்து மூன்று BSF பட்டாலியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) ஒரு பிரிவு அபுஜாமத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல, 8 ITBP பட்டாலியன்கள் நாராயணபூர், ராஜ்நந்த்கான் மற்றும் கொண்டகான் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்பட்டு, புதிய முன்னோக்கி இயக்கத் தளங்களை உருவாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட சம்பவம், "சத்தீஸ்கரில் உள்ள பாதுகாப்புப் படையினரின் மிகப்பெரிய வெற்றி" என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் இதுபோன்ற இரண்டு பெரிய என்கவுன்டர்கள் கடந்த காலங்களில் நடந்திருந்தாலும், மாவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.