ஶ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மட்டுமின்றி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேஜ கூட்டணி முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐந்து சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 55 பேரின் ஆதரவு ஒமர் அப்துல்லாவுக்கு உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை கடந்த 11 ஆம் தேதி துணை நிலை ஆளுநரிடம் ஒமர் அப்துல்லா வழங்கினார். இதையடுத்து ஒமர் அப்துல்லாவை ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி மைக்க வருமாறு வேண்டுகோள் விடுகின்றேன். உங்களுக்கு, என்னால் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்படும். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். பதவி ஏற்பு விழா அக்டோபர் 16ஆம் தேதி காலை 11.30க்கு நடைபெறும்," என்று கூறியுள்ளார். தால் ஏரியின் அருகே ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாடு மையத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் எண்ணிக்கை என்பது சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 90 எம்எல்ஏக்களில் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஒமர் அப்துல்லா தவிர 8 பேர் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஶ்ரீநகரில் உள்ள அரசின் செயலகத்தில் முதலமைச்சர், அமைச்சர்களுக்கான அறைகள் தயாராகி வருகின்றன.2018ஆம் ஆண்டு பாஜக-பிடிபி தலைமையிலான அரசு கவிழ்ந்தது முதல் ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே ஶ்ரீநகரில் உள்ள அரசின் செயலகத்தில் பெரும்பாலான அறைகளை அதிகாரிகளுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது புதிய அரசு பொறுப்பேற்பதையடுத்து அதிகாரிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.