நொய்டா:உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் தீபா தேவி. கடந்த 15ஆம் தேதி இன்ஸ்டன்ட் பொருட்கள் டெலிவிரி செய்யும் தனியார் நிறுவனத்தின் மூலம் பிரபல தனியார் நிறுவனத்தின் வெண்ணிலா பிளேவர் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்து உள்ளார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை அவர் திறந்து பார்த்துள்ளார்.
அதில் ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானைக் கண்டு தீபா தேவி அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனே இதுகுறித்த ஆன்லைன் டெலிவரி தளத்திடம் அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைப் பெற்றுக் கொண்ட ஆன்லைன் டெலிவரி தளம், அமுல் தரப்பின் பிரதிநிதி இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிப்பார் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் ஐஸ்கிரீமிற்கான தொகையையும் தீபாவிடம் நிறுவனம் திருப்பி அளித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் இமிருந்து தனக்கு எந்த தொடர்பும் வரவில்லை என்று தீபா தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனது இணையதளப் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அந்த பதிவை பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தாமாக முன் வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். பூரான் கிடந்ததாக கூறப்படும் ஐஸ்கிரீமின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் மேற்கு மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் போன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த விரல் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நொய்டாவில் ஐஸ்கிரீமில் பூரான் கிடந்ததாக கூறப்படும் சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் மாயம்! தண்ணீரில் தத்தளித்த 13 பேர் மீட்பு! - Gangai River Boat Capsize