அமராவதி:மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக அதானி குழுமத்துடன் நேரடி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும், இந்திய சோலார் எரிசக்தி கழகத்துடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் பெறுவதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் உள்ளிட்ட ஏழு பேர் மீது 20 ஆண்டுகளுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் லாபம் தரக்கூடிய சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்காக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் நீதித்துறை கூறியுள்ளது.
2021, 2022ஆம் ஆண்டு காலகட்டங்களில் அதானி, தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரிகளை சந்தித்து இந்திய சோலார் எரிசக்தி கழகத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறியுள்ளது. இதன் கூற்றுப்படி அப்போது ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, "2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்காக ஆந்திரபிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஆந்திர பிரதேச மின் விநியோக நிறுவனத்தக்கும் இந்திய சோலார் எரிசக்திக்கழகத்துக்கும் இடையே மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதையும் படிங்க:அமெரிக்கா பிடிவாரண்ட்: அதானியுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா..!
இந்திய சோலார் எரிசக்தி கழகம் என்பது மத்திய அரசின் நிறுவனம் என்பதை குறிப்பிட வேண்டிய தேவை எழுந்துள்ளது. மின்சார கொள்முதலுக்காக அதானி குழுமம் உட்பட எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் ஆந்திர அரசு மின்விநியோக நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. எனவே, அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது சரியாக இருக்காது இந்திய சோலார் எரிசக்தி கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்தள்ளது.
25 ஆண்டுகளுக்கு தலா ஒரு கிலோவாட் மின்சாரம் ரூ.2.49 என்ற அளவில் 7000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2024-25ஆம் ஆண்டு தொடங்கி 3000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கும், 2025-26ஆம் ஆண்டு தொடங்கி 3000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கும், 2026-27ஆம் ஆண்டு முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 கோடி சேமிக்கப்படுகிறது. எனவே ஒட்டு மொத்த 25 ஆண்டுகளுக்கும் மாநில அரசுக்கு சேமிப்பாகும் தொகை அளவிடமுடியாதது,"என்று கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்