டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறுகிறது. ஜூன் 24ஆம் தேதி தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. அதன்பின், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. விரைவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (ஜூன்.22) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். பட்ஜெட் தொடர்பான தங்களது பரிந்துரைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் தொழில்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள், நிதி மற்றும் மூலதன சந்தை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
முன்னதாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை கடந்த 19ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலர், பொருளாதாரம் சார்ந்த துறைகளின் செயலாளர்கள், வருவாய், நிதிச்சேவை, பெரு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மாநில நிதி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மாநில நிதி அமைச்சர்கள் பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய வரிவிதிப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் மீதான வரி நீக்கம் உள்ளிட்டவற்று குறித்து அலோசனை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க:வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் இந்தியா வருகை! திடீர் சுற்றுப்பயணத்திற்கு என்ன காரணம்? - Bangladesh PM India visit