புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமரும், இந்திய பொருளாதார மேதையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (Manmohan Singh) முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்த நிலையில், இன்று முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிச.26) முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், உடல்நிலையில் பின்னேற்றம் ஏற்பட்டு, அன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று, மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், காங்கிரஸின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசும் அவரது மறைவுக்காக ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களும் மன்மோகன் சிங் மறைவுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச.28) மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. அதற்காக, இன்று மன்மோகன் சிங் வீட்டில் இருந்து அவரது உடல், டெல்லியில் உள்ள காங்கிரஸ் (AICC) கட்சியின் தலைமை அலுவகலத்திற்கு காலை 8 மணிக்கு கொண்டு செல்லப்படும் எனவும், அங்கு காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்துபவர்கள் பாதுகாப்பு கருதி, 40 (காலை - 7.20) நிமிடங்கள் முன்னதாக வர கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Manmohan Singh: பொருளாதார மேதை மறைவு.. "இந்தியாவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு" - அரசியல் தலைவர்கள் உருக்கம்!
அதன்பின்னர், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, காலை 9.30 மணிக்கு மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் துவங்கி, யமுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து, காலை 11.45 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.