ஜோத்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.26) காலமானார். 92 வயதான மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், '' டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுடன் பொருளாதார சீர்திருத்தங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டுக்கு புதிய வேகத்தையும், திசையையும் ஏற்படுத்தின'' என்றார்.
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், '' மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த டாக்டர் மன்மோகன் சிங், உலகின் சில மதிப்புமிக்க நிறுவனங்களில் படித்து, தேசத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தார். ஒரு பொருளாதார நிபுணராகவும், இந்தியாவின் தற்போதைய பொருளாதார தாராளமயமாக்கலின் முன்னோடியாகவும் அவர் நினைவுகூரப்படுவார்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, '' நம் நாடு ஒரு அரசியல்வாதியை மட்டுமல்ல, ஒரு பொருளாதார நிபுணரையும் இழந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள சாதாரண கிராமத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக மாறிய அவரது பயணம், தேசத்திற்கு சேவை செய்வதில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை காட்டுகிறது. மன்மோகன் சிங் தனது எளிமைக்காகவும், பொருளாதார முன்னேற்றங்களுக்கான முக்கிய முடிவுகளுக்கு எப்போதும் நினைவுகூரப்படுவார். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதார மேதை மறைவு.. "இந்தியாவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு" - அரசியல் தலைவர்கள் உருக்கம்!
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மன்மோகன் சிங் திறமையில் உயர்ந்தவர். அவரது திறமை மற்றும் கொள்கைகளால் நாடு பல இடங்களில் புதிய திசைகளை கண்டுள்ளது. பொருளாதார நிபுணர், முன்னாள் பிரதமர், முன்னாள் நிதியமைச்சர் என இப்படிப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த டாக்டர் மன்மோகன் சிங் நம்மை விட்டுப் பிரிந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், '' மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி ஆவார். அவரது மறைவு தேசத்திற்குப் பின்னடைவு மட்டுமல்ல, எனக்கு தனிப்பட்ட இழப்பும் கூட. நான் அவரை நீண்ட காலமாக அறிவேன். அவர் கண்ணியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு'' என கூறியுள்ளார்.
வயநாடு எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, ''மன்மோகன் சிங்கின் நேர்மை குணம் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக இருக்கும். இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்களிடையே அவர் என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்பார்'' என்று கூறினார்.
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா ஆகியோரும் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை (டிச.28) நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார் என ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது.