அமராவதி: ஆந்திராவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. விஜயவாடாவில் உள்ள பல்வேறு சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஜயவாடாவின் முகல்ராஜபுரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல், விஜயவாடா யனமலக்குடாருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பட்டியில் இருந்த சுமார் 20 ஆடுகள் உயிரிழந்தன. விஜயவாடாவின் பல பகுதிகளில் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மலைப் பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில் பிரசித்தி பெற்ற துர்கா மலை கோயிலில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால்ம் கோயிலின் முகப்பு சாலை மூடப்பட்டுள்ளது.