சென்னை: இந்த ஆண்டிற்கான முதலாவது சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ரவி தனது உரையை பேசி கூட்டத்தை தொடங்க வைக்க இருந்தார். ஆனால், பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார். தேசிய கீதம் இசைக்க அனுமதிக்காததால் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், அண்ணா பல்கலை விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறி பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி '' யார் அந்த சார், என்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, "இது ஆளுநர் உரையல்ல.. சபாநாயகர் உரையாக தான் பார்க்கிறோம். இந்த அரசில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளுநர் உரையில் என்ன இருக்கிறதோ அதையே தான் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
அரைத்த மாவைத் தான் அரைக்கிறார்கள்
அரைத்த மாவைத் தான் அரைக்கிறார்கள். ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரை என்பது மாறி சபாநாயகர் உரையாகத்தான் உள்ளது. பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் இருப்பதே தவிர உள்ளே ஒன்றும் இல்லை. இந்த அறிக்கையில் திமுக சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறே தவிர மற்ற எதுவும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்லவில்லை. திட்டமிட்டு ஆளுநரை வெளிநடப்பு செய்ய வைத்திருக்கிறார்கள்.
இன்றைய தினம் ஆளுநர் உரையில் 2030 ஆம் ஆண்டு தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று புதிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதோடு தரமான கல்வி வழங்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக காலத்தில் அனைத்து பள்ளிகளும் சரி, கல்வி கற்பவர்கள் எண்ணிக்கையும் சரி, உயர்கின்ற வகையில் பல பள்ளிகளை திறந்தோம். இதனால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய அரசு 2030ல் அறிவிக்கப்பட்ட இலக்கை 2019 மற்றும் 2020-லேயே பள்ளிகளில் படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை வாங்கியது.
கருப்பு நிறத்தை பார்த்து ஏன் பயம்
தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் போது எந்நேரம் ஆனாலும் சரி என்னை தொடர்பு கொண்டு மனு கொடுக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அது நடக்குமா? நேற்று ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். மாணவிகள் கருப்பு உடை அணிந்து வருவதற்கு தடை விதித்திருந்தனர். இதனால் மாணவிகள் அணிந்திருந்த கருப்பு துப்பட்டாவை வெளிய வைத்துவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். கருப்பு நிறத்தை பார்த்து ஏன் முதலமைச்சர் இவ்வளவு அச்சப்படுகிறார்.
இந்த ஆட்சியில் தான் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஏன் இந்த அரசு பதட்டப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடே பதறிப் போய் கிடக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களும் கொதித்த நிலையில் இருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அடையாளம். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம். ஆனால், இந்த அரசு அவ்வாறு இல்லை. எதற்குமே அனுமதி கொடுப்பதில்லை, கூட்டணி கட்சிக்கு கூட அனுமதி இல்லை. கே. பாலகிருஷ்ணன் ஒரு கருத்தை கூறுகிறார். ஆனால் அவருக்கும் அனுமதி இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.