சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2025) முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 6) காலை 9.30 மணி அளவில் ஆளுநர் உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவி பேரவைக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்ற சபாநாயகர் அப்பாவு, காவல்துறை மரியாதைக்கு பின் பேரவைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆளுநர் அவரது உரையை நிகழ்த்துவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து பாடியதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது. அதில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
ஆனால் இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்," என குறிப்பிட்டுள்ளது. ஆளுநர் வெளியேறியதை அடுத்து, உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார்.
சபாநாயகர் பதில்:
பின், செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் உரையுடன் இன்றைய சட்டப்பேரவை கூடியது. அதன் தொடர்ச்சியாக, அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதனால், நாளை பேரவை ஒத்திவைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக ஜனவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும். பின், நான்காவது நாள் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் நன்றி உரை கூறி நிறைவு செய்வார். முதல் மூன்று நாட்கள் கேள்வி நேரம் நிச்சயமாக இருக்கும்.
ஆளுநர் உரைக்காக தயாராக இருந்த போது அவர் முன் அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் குறித்து பதாகைகளை காட்டினர். எந்த நோக்கத்தில் இதை செய்தனர் என தெரியவில்லை. ஆளுநர் தான் பல்கலைக்கழக வேந்தர் என்பதால் இவ்வாறு செய்தனரா? என தெரியவில்லை. இவ்வாறு ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதாகை காட்டியதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆளுநர் கடமை ஆற்ற மறுத்துவிட்டார்:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 176 (1) படி கண்டிப்பாக ஆளுநர் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கத்தில் உரை நிகழ்த்தியிருக்க வேண்டும்.
ஆனால் மூன்றாவது முறையாக ஆளுநர் தனது கடமையை செய்யாமல் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து கண்டித்திருக்கிறோம். இதுவரை எந்த ஆளுநரும் இது போன்ற பிரச்னையை உருவாக்கியதில்லை.
பேரவை முன்னவர் துரைமுருகன் கூறியது போல் 1995ஆம் ஆண்டு முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் ஆளுநர் தேர்ந்தெடுக்கும் போது மாநில அரசிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
அதன் பிறகுதான் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி ஆளுநர் உரை என்ற ஒன்று வந்தது. எனவே, பேரவையில் கருத்து சொல்லும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறிப்பினர்களுக்கு தான் உள்ளது.
பேரவையில் ஆளுநர் கருத்து செல்ல முடியாது:
ஆளுநருக்கு சட்டபேரவையில் கருத்து சொல்லும் உரிமை இல்லை. உண்மையில் ஆளுநருக்கு உரையை வாசிக்க விருப்பம் இல்லை. அதனால் இதுபோன்று காரணம் சொல்லி கடமையை செய்ய மறுக்கிறார் என்பதை நான் இன்று தெரிந்துக் கொண்டேன். ஆளுநர் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்தில் சட்டமன்றத்திற்கு என்ற ஒரு மரபு உள்ளது. அதில் எங்கும் ஆளுநரின் கோரிக்கையை ஏற்பது குறித்து சட்டம் இல்லை. இது தமிழ்நாடு, தமிழ்மரபு படி தான் இங்கு சட்டமன்றம் நடக்கும். முதலில் தமிழ்தாய் வாழ்த்துதான் இசைக்கப்படும். நாங்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் இந்த மரபு தான் சட்டபேரவையில் இருக்கும்," என்றார்.