சென்னை: ஜெமினி ஃபிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2012இல் உருவான திரைப்படம் ‘மதகஜராஜா’. 12 வருடங்களுக்கு பிறகு இப்படம் வரும் 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் சுந்தர்.சி பேசுகையில், “இப்படத்திற்காக மீண்டும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் சுப்ரமணியம் எனக்கு தொலைபேசியில் அழைத்தார். அப்போது அவர் மதகஜராஜா படத்தை பாராட்டிப் பேசினார். எப்போதும் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு படத்தின் வசூல் விபரங்கள் குறித்து தான் பேசுவார். அவர் மதகஜராஜா படத்தை பாராட்டியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்த படத்தின் மூலம் எனக்கு விஷால் அறிமுகமானார். தற்போது அவர் எனக்கு உடன் பிறவா சகோதரர். 80களில் வெளியான சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற ஜனரஞ்சக திரைப்படங்கள் வந்தது. அது போல ஒரு திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டோம். அது போன்ற ஒரு படம் தான் மதகஜராஜா. நாங்கள் இப்படத்தின் வெளியீட்டை அறிவித்த போது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வார்களோ என பயம் இருந்தது.
ஆனால் மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த போது கிடைத்த வரவேற்பு எங்களுக்கு சந்தோஷ சர்ப்ரைஸாக இருந்தது. அதே நேரத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்படத்தில் முன்பு எதுவும் சொல்லாத விஷயத்தை சொல்லவில்லை. மதகஜராஜா ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் தான். பொங்கல் ரிலீஸை மனதில் வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளோம். என்னுடைய குருநாதர் மணிவண்ணன் சார் இப்படத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் மனோபாலாவும் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்தார். இப்படத்தில் என்னைவிட அதிகமாக கஷ்டப்பட்டவர் என்றால் விஷால் தான். நான் தெரியாமல் அவரிடம் இப்படத்தின் கிளைமாக்ஸில் 8 பேக் வைக்க வேண்டும் என்று கூறினேன். ஒரு சில காரணங்களால் கிளமாக்ஸ் காட்சி ஷூட்டிங் ஒரு வருடம் தள்ளிப் போனது. கிட்டதட்ட 1 வருடம் 8 பேக் உடலுடன் சிரமப்பட்டார்.
இதையும் படிங்க: கடும் காய்ச்சல், கை நடுக்கத்துடன் 'மதகஜராஜா' பட நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால்; வைரலாகும் வீடியோ! - VISHAL IN MADHAGAJARAJA EVENT
சண்டை காட்சிகளில் விஷாலின் நடிப்பை பாராட்ட வேண்டும். ஒரு சண்டை காட்சியில் விஷாலுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் பெரும் பயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விஷாலை அழைத்து சென்றோம். விஷால் உடற்பயிற்சி செய்து வலிமையாக இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர் கூறினார். காயம் குறித்து கவலைப்படாமல் அடுத்து ஷூட்டிங்கிற்கு வந்தார். நான் மதகஜராஜா படம் வெளியாக வேண்டும் என நினைத்ததற்கு காரணம், விஷாலின் சிரமங்களை மக்கள் பார்க்க வேண்டும், மதகஜராஜா ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்” என்றார்.