பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடித்தது. அதில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பற்றிய விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் முஷாமி ஷரீப் என்பவர் டெல்லியில் கடந்த மார்ச் 26ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டுள்ளார் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு பேர் முசாவீர் சாஹிப் ஹுசைன் (வயது 30) மற்றும் அப்துல் மதீன் தாஹா (வயது 30) ஆகியோரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த இரண்டு பேர் குறித்து கிடைத்த தகவலை அடுத்து கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.