பெங்களூரு:மைசூரு நகர்புற வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான வீட்டுமனை நிலத்தை முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மைசூரு நகர்புற வளர்ச்சி ஆணைய ஊழல் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காத நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் சித்தராமையா மற்றும் சபாநாயக யுடி காதர் ஆகியோருக்கு எதிரான உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டபேரவையில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படுக்கைகளுடன் வந்த பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், மாநில பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா உள்ளிட்டோரும் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மைசூரு நகரபுற வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு மனையை முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கியது குறித்தும், வால்மீகி பழங்குடியின ஆணையத்தில் 180 கோடி ரூபா ஊழல் நடந்தது குறித்தும் அவையில் காங்கிரஸ் கட்சி விவாதிக்க மறுப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.
பழங்குடியின மற்றும் பட்டியிலன மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கட்சி சுயநலத்திற்காகவும், தனது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ஊழல் செய்த முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.
சித்தராமையா ஈடுபட்டுள்ள மைசூர் மூடா ஊழலைக் கண்டித்து, முதலமைச்சர் பதவி விலகக் கோருகிறோம். வால்மீகி வளர்ச்சிக் கழகத்தின் பல கோடி ஊழல் உள்ளிட்ட வளர்ச்சி இல்லாத காங்கிரஸ் அரசுக்கு எதிராக இரு அவைகளிலும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் உறுப்பினர்களுடன் சட்டப் பேரவையில் ஒரு மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சுரங்க தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷடம்! ரூ.1 கோடி மதிப்பிலான வைரத்தால் மாறிய வாழ்க்கை! - Labourer turns millionaire in MP