டெல்லி: ஜனவரி 25 அன்று வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், மசூதி வளாகத்தில் உள்ள இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் பிற உருவப்படங்கள், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி, இந்து மதக் கோயில் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதற்கான அடிப்படை சாட்சியங்களாக உள்ளது என்று அந்த அறிக்கையில் இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஞானவாபி மசூதியின் தெற்கு நிலவறையில் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் உள்ள 7 அறைகளில், ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்குத் தனது தாத்தா பூஜை செய்து வந்ததாகவும், 1993ஆம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், நேற்றைய தினம் (ஜன.31) ஞானவாபி மசூதியின் தெற்கு நிலவறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.