தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... நாடு கண்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயர சம்பவங்கள்! - Major Stampede Incidents in india

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 1:11 PM IST

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் இதுவரை நாடு கண்ட கூட்ட நெரிசல்களால் ஏற்பட்ட உயிரிழப்பு துயர சம்பவங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Etv Bharat
File Picture (ETV Bharat)

ஐதராபாத்: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் சாமியார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை நடந்த கூட்ட நெரிசல் விபத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

25.03.2024:கேரள மாநிலம் கொல்லம் கொட்டாங்குளங்கரா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

17.03.2024: உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஸ்ரீஜி கோயிலில் ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் விளைவாக குறைந்தது ஆறு பக்தர்கள் மயங்கி விழுந்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

24.12.2023: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் நெரிசல் காரணமாக இரண்டு பெண் பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

20.08.2022: உத்தர பிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 வயது ஆணும் 55 வயது பெண்ணும் உயிரிழந்தனர், ஏழு பக்தர்கள் காயமடைந்தனர்.

21.04.2019: தமிழகத்தின் திருச்சியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். திருச்சி முத்தாயம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் நடந்த சித்ரா பௌர்ணமி விழாவின் போது கருப்பசாமி சிலை முன்பு பூசாரியிடம் பிடிக்காசு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

10.08.2015: ஜார்கண்ட் மாநிலம் தியோகர் நகரில் உள்ள கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் ஜோதிர்லிங்க கோயிலின் கதவுகள் திறந்த சிறிது நேரத்திலேயே பக்தர்கள் கட்டிடத்தை நோக்கி ஓடியதை அடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

14.07.2015:ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் புஷ்கரம் விழாவின் தொடக்க நாளில் கோதாவரி ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பக்தர்கள் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

25.08.2014:மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டம் சித்ரகூடில் உள்ள கம்தா நாத் கோயில் குறித்து வதந்தி பரவியதால் கூடிய பொது மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். .

அக்டோபர் 13, 2013: மத்தியப் பிரதேசம், டாடியாவில் உள்ள ரத்தன்கர் இந்து கோயில் அருகே கூட்ட நெரிசலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிந்து நதியின் மேல் உள்ள ரத்தன்கரில் உள்ள கோயிலுக்கு செல்லும் பாலத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது.

14.01.2011: கேரளாவில் சபரிமலை கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 106 பக்தர்கள் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு என்ற இடத்தில் பக்தர்கள் மீது ஜீப் மோதியதில் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் பஸ் பிடிக்க வந்து கொண்டிருந்த போது புல்மேடு பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக 104 பேர் உயிரிழந்தனர் மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

04.03.2010: உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கரில் உள்ள ராம் ஜான்கி கோயிலில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இலவச ஆடைகள் மற்றும் உணவுகளை பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழக்க காரணமாயிற்று.

30.09.2008: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மெஹ்ரான்கர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 244 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். சுமார் 300 பக்தர்கள் குவிந்திருந்த நிலையில், கோயிலில் உள்ள தெய்வத்தை காண செல்லும் பாதை குறுகியதாக இருந்ததால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமானது.

03.08.2006: இமாச்சலப் பிரதேசத்தின் நைனா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

26.01.2005:மேற்கு மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் மாந்தர் தேவி கோயில் பகுதியில் மின் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பொறிகள் பரவியதால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீதியடைந்தனர். கோயிலுக்கு செல்லும் குறுகிய பாதையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறி விழுந்ததில், 291 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

27.08.2003: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கும்பமேளாவில் புனித நீராடும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 140 பேர் காயமடைந்தனர்.

மதம் சார்ந்த கூட்டங்களில் அதிகளவில் கூட்ட நெரிசல்கள் ஏற்படக் காரணம் என்ன?

இந்தியாவில் பெரும்பாலும் கிராமப் புறங்களில் நடைபெறும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் தான் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நடைபெறுவதாகவும் அதற்கு போதிய இடவசதி இல்லாதது, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பற்றாக்குறையே காரணம் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் போதிய வசதிகள் இன்மையே கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குத்தான சரிவுகள், இடத்தின் சீரற்ற நிலப்பரப்பு, வழுக்கும் மற்றும் சேற்று தரைகள், குறுகிய பாதைகள், ஒரே இடத்தில் பொது மக்கள் குவிவது ஆகியவை மதம் சார்ந்த நிகழ்வுகளில் நிலவும் பொதுவான ஆபத்துகளில் ஒன்று என்றும் பாதுகாப்பில் காட்டப்படும் சமரசம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்புக்கான இதழ் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, மதம் சார்ந்த நிகழ்வுகளால் மட்டும் இந்தியாவில் 79 சதவீத கூட்ட நெரிசல் விபத்துகள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் அரங்க நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், இரவு நேர கேளிக்கை விடுதிகளில் அதிகளவு கூட்ட நெரிசல் விபத்துகள் நடைபெறும் நிலையில், இந்தியாவில் மட்டும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் அதிகளவில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மலைப் பிரதேசங்கள், ஆற்றுப் படுகைகள், போதிய பாதை வசதிகள் இல்லாத பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் விபத்துகளை தடுக்க என்ன வழி:

கூட்ட நெரிசல் விபத்துகள் தொடர்பாக ஐஐடி அகமதாபாத் அளித்த பரிந்துரைகளில், அதிகளவில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் வரிசை முறையை அமல்படுத்துவது, பொது அனுமதிக்கு ஊக்கமளிக்கக் கூடாது, அதிகளவில் மக்கள் வெள்ளம் ஏற்படும் போது அவர்களை வெளியேற்ற தேவையான போதிய வசதிகளை உருவாக்குவது, விஐபி பார்வையாளர்களுக்கு என தனி பகுதியை உருவாக்குவது உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரளும் இடங்களில் ஜெனரேட்டர்கள், சர்கியூட் பிரேக்கர்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வைப்பது, டீசல் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் எரிவாயுக்களை மக்கள் கைகளில் எட்டாத இடத்தில் வைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அகமதாபாத் ஐஐடி பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஹத்ராஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு.. தப்பியோடிய போலே பாபா-வை பிடிக்க தனிப்படை! - HATHRAS STAMPEDE UPDATE

ABOUT THE AUTHOR

...view details