டெல்லி:18வது மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களையும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 241 இடங்களையும் கைப்பற்றின.
மெஜாரிட்டிக்கு 271 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றம் நாளை (ஜூன்.24) கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதையடுத்து, ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ஆம் தேதி தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
இந்த பதவியேற்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். தற்காலிக சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, பா.ஜ.க உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் அடங்கிய குழு உதவுவார்கள் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், அவை மரபுபடி அதிகமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சுரேஷ், தொடர்ந்து 8 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி உள்ள அவருக்கு பதிலாக ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்பி பரத்ருஹரி மஹ்தாப்க்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேநேரம் பரத்ருஹரி மஹ்தாப் தொடர்ந்து ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சுரேஷ் 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் தோல்வியை தழுவியதாகவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்நிலையில், துணை தற்காலிக சபாநாயகர் பொறுப்புகளை நிராகரிப்பதாக காங்கிரஸ் கட்சி மக்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் டிஆர் பாலு உள்ளிட்டோரும் தற்காலிக உதவி சபாநாயகர் இருக்கையில் நாளை அமர மாட்டார்கள் என கடிதத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இளங்கலை நீட் மறுதேர்வு: 750 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை! என்ன காரணம்? - NEET UG Retest