டெல்லி:நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (ஏப்.26) கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவை தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். தொடந்து 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், ஆறு மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து, அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக மாலை 5 மணி நிலவரப்படி திரிபுராவில் 77.53 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 52.74 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மணிப்பூரில் 76.06 சதவீதம், மேற்கு வங்கத்தில் 71.84 சதவீதம், சத்தீஸ்கர் மாநிலத்தில் 72.13 சதவீதம் மற்றும் அசாமில் 70.66 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் 53.51 சதவீதம், பீகாரில் 53.03 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 54.83 சதவீதம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 59.19 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாலை 5 மணி நிலவரப்படி கேரளாவில் 63.97 சதவீதமும், கர்நாடகாவில் 63.90 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 67.22 சதவீத வாக்குகளும் பதிவானதாக கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மே 3ஆம் தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க :2ஆம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளாவில் மூக்கு மூலம் வாக்களித்த மாற்றுத்திறனாளி இளைஞர்! - Lok Sabha Election 2024