கரூர்: சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆளுமை அறிவு உள்ளது என்பதை ஏற்க முடியாது என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி கரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பாஸ்கரன் மூலமாக காந்தி பேரவை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தன், தமிழ்நாடு காவல் துறை இயக்குநரிடம் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி மீது அளிக்கப்பட்டிருந்த புகாரில், 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எழும்பூர் இக்க்ஷா அரங்கத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் முன்பு கள் போதைப்பொருள் என்று நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக கூறினார்.
அந்த விவாதத்தில் கள், போதைப்பொருள் தான் என்று ஓய்வு பெற்ற நீதிபதி தீர்ப்பளித்த பிறகும் இன்றைய நாள் வரை பரிசு தொகையை வழங்காமல் ஏமாற்றிய நல்லசாமி, தற்போது 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் என அந்த புகாரில் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புகார் தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதனை ஏற்று நேற்று (ஜன.20) கரூர் நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான போது, காவல் ஆய்வாளர் வேறு பணி காரணமாக விசாரிக்க இயலாது என்பதால் வேறொரு நாளில் ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட நல்லுசாமி, மனு ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, "கள் போதை பொருள் அல்ல என்பது குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எழும்பூர் இக்க்ஷா அரங்கத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி சேர்ந்த குமரி ஆனந்தனை அழைத்து வந்தார். இதுவரை அன்று வழங்கிய தீர்ப்பின் நகல் தனக்கு கொடுக்கப்படவில்லை.
அப்படி இருக்கையில், என் மீது குமரி ஆனந்தன் அளித்துள்ள புகாரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் குமரி ஆனந்தன் மட்டுமல்ல மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோருடன் நேரடியாக கள் சம்பந்தமாக விவாதிக்க தயாராக இருக்கின்றேன். கள் போதை பொருள் என அவர்கள் நிரூபிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது மக்களிடம் ஆட்சிக்கான ஆதரவை அதிகரிக்கிறது...மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இந்தியா முழுவதும் மக்களுக்கு அரசின் சார்பில் இலவசங்கள் வழங்கப்படும் என தேர்தல்களில் வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாகிவிட்டது. எந்த அரசியல் கட்சிகளிடமும் தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல், இலவசங்களை வழங்கி மக்களின் உழைப்புக்கு சாவு மணி அடிப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
மேலும், தமிழகத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். அக்கட்சியில் ஆதவ் அர்ஜுனா என்ற லாட்டரி அதிபரின் உறவினரை இணைப்பது எதற்காக என கேள்வி எழுப்பினார். யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதைப் போல அரசியலில் நடிகர் விஜய் பேசி வருகிறார். திரைப்படத்தில் ஆளுமை மிக்க நபராக காட்சிப்படுத்தப்பட்ட நடிகர் விஜய் ஆட்சியில் அமர்ந்தால் அலங்கோலமாக இருக்கும். நடிகர் விஜய் இருக்க வேண்டிய இடம் தமிழக அரசியல் களம் இல்லை.
நடிகர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றால் இந்தியா சீன எல்லையில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்? திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் சினிமா நடிகர்களுக்கு ஆட்சியை ஆளும் திறமை உள்ளது என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து நேரடியாக விவாதிக்க நடிகர் விஜய் தயாராக உள்ளாரா?" என கள் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.