பெங்களூரு:ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதற்கு 6 பெட்டிகளுடன் வீடியோ, போட்டோகிராபரை அழைத்து வரும் படி தமிழ்நாடு அரசுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட சொத்துகளை ஒப்படைக்குமாறு ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை பெங்களூரு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், ஆர்டிஐ ஆர்வலர் டி நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்த பொருட்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேட்டிருந்தார். இதையடுத்து இந்த மனுவை, பெங்களூரு 36ஆவது நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது வரும் பிப்ரவரி 14, 15ஆம் தேதிகளில் ஆஜராக வேண்டும் என நரசிம்ம மூர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கு 6 டிரங்க் பெட்டிகள் கொண்டு வருவதுடன், வீடியோகிராபர், போட்டோகிராபர் ஆகியோரையும் தமிழ்நாடு அரசு அழைத்து வரவேண்டும் எனவும் பெங்களூருவின் 36ஆவது நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நீதிமன்றத்தின் வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்கள்
7,040 கிராம் எடை கொண்ட 468 வகையான வைரம், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி நகைகள், விலை மதிப்பு மிக்க 740 காலணிகள், 11,344 பட்டுச்சேலைகள், 250 பொன்னாடைகள், 12 குளிர்சாதனப்பெட்டிகள், 10 டிவி செட்கள், 8 விசிஆர்கள், ஒரு வீடியோ கேமரா, 4 சிடி பிளேயர்கள், 2 ஆடியோ டெக்குகள், 24 டூ இன் ஒன் டேப் ரிக்கார்டரகள், 1040 வீடியோ கேசட்கள், 3 இரும்பு லாக்கர்கள், ரூ.1,93,202 ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நீதிமன்றத்தின் வசம் உள்ளன.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்தது. ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பு மிக்க பொருட்களை ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ வங்கிகளிடம் விற்பனை செய்ய வேண்டும் அல்லது பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அபராதத் தொகையாக வசூலிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கினை 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பபட்டன.