கோயம்புத்தூர்: கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்.ஐ.சி. காலனியில் அடுத்தடுத்துள்ள கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஹோட்டல், மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை, கொரியர் அலுவலகம் என 14 கடைகளின் ஷட்டரின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சுந்தராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கடையில் இருந்த கல்லாப்பெட்டி மற்றும் உண்டியலில் இருந்து பணம் ஆகியவற்றை மட்டும் திருடி இருப்பதாகவும், பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 'போலாம் ரைட்...' நீலகிரியில் முதல் பெண் நடத்துநர் சுகன்யா! கணவன் பணி புரிந்த கிளையிலேயே பணி!
இந்நிலையில், திருடு போன பணம் மொத்தம் எவ்வளவு? வேறு ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மர்ம நபர் ஒருவர் கடைகளுக்குள் வந்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் டவுசர் அணிந்த மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு கடைகளாக சென்று பூட்டை உடைக்கும் காட்சிகளும், கடைகளுக்குள் வைத்திருக்கும் உண்டியல் பணம், டேபில்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் ஒரே நாளில் நடந்தேறியுள்ள திருட்டு சம்பவம் சுந்தராபுரம் பகுதியில் மிகுந்த பதட்டத்தை உருவாகியுள்ளது.