கோயம்புத்தூர்: 2025 -26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டின் எதிர்பார்ப்பு கடந்த முறையை விட இந்த தடவை அதிகமாக உள்ளது. காரணம் உற்பத்தி துறையை பொருத்த வரை இந்த முறை அதிக அளவு தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அமெரிக்கா அதிபராக பொறுப்பு ஏற்றுள்ள ட்ரம்ப், சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் போது, இந்தியாவிற்கு நல்ல சாதகமான சூழல் ஏற்படும்.
ஏற்றுமதியும் வளர்ச்சியும்: சீனா 13 பில்லியன் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. நாம் 1.3 மற்றும் 1.4 டாலர் பில்லியன் அளவு ஏற்றுமதி செய்கிறோம். நமக்கு 10 சதவீதம் வாய்ப்பு வரும் போது சந்தையை நாம் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட்டில் இரண்டு முக்கியமான விஷயங்கள் தேவைப்படுகின்றன. பிஎல்ஐ 2 என்கிற சிறு நடுத்தர நிறுவனங்கள் பங்கு பெறக் கூடிய சிறப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அதிகளவிலான முதலீடுகளை பெற்று ஏற்றுமதி அதிகரிக்கும். அப்போது, உலக நாடுகளுடன் இந்தியா போட்டி போடக்கூடிய அளவிற்கு உயரும்.
இறக்குமதி வரி நீக்கப்பட வேண்டும்: மூலப் பொருட்களின் விலை மற்ற நாடுகளில் என்ன விலைக்கு கிடைக்கிறதோ, அதை விலைக்கு இங்கும் கிடைக்க வேண்டும். அதே போல் செயற்கையாக உருவாக்கப்பட்ட இறக்குமதி வரி நீக்கப்படும் பட்சத்தில் உலக நாடுகளுடன் போட்டி நிலவும் சூழலில் விவசாயிகள் மற்றும் தொழில் துறைக்கு நல்ல வாய்ப்புகளும், வருமானமும் கிடைக்கும்.
இந்தியாவில் 300 முதல் 330 லட்சம் பேல் வரை பருத்தி விளையும்பட்சத்தில் 90% நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் ஏற்றுமதி மிகவும் குறைவான அளவில் உள்ளது. இந்த துறையில் பருத்தியுடன், பாலிஸ்டர் கலப்பதால் அவற்றிற்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தேவைகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு 400 கிலோ வரை மட்டுமே கிடைக்கிறது. மற்ற நாடுகளில் 1000 கிலோவை தொட்டு விட்டது. இதை 30% அதிகப்படுத்தும் போது 4.5 கோடி பேல் வரும்போது துறை வளர்ச்சி பெரும் அது நீண்ட கால நோக்காக இருக்கும். பருத்திக்கான இறக்குமதி வரி 11% நீக்க வேண்டும்" என்றார்.
பருத்தி பற்றாக்குறை நாடு: இதையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து சைமா எனப்படும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் சுந்தரராமன் பேசுகையில், “இந்தியா பருத்தி மிகை நாடு என்ற நிலையில் இருந்து, பருத்தி பற்றாக்குறை நாடு என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆண்டுக்கு சுமார் 400 லட்சம் பேல்கள் பருத்தி தேவைப்படும் நிலையில், சுமார் 300 லட்சம் பேல்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 75 சதவீதம் பருத்திகள், அதாவது 225 லட்சம் பேல்ஸ் தொழில்துறைக்கு பயன்படுத்தப்படுகிறது. பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்படுவதால், ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: செல்லப் பிராணிகள் வளர்ப்பு.. உரிமையாளர்களுக்கு சென்னை மாமன்ற கூட்டத்தில் 'செக்'!
2030ஆம் ஆண்டில் பருத்தியின் தேவை 550 லட்சம் டன்களாக அதிகரிக்கும். தற்போது, ஜவுளித்துறையில் 162 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதில் 35 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை 2030ஆம் ஆண்டில் வர்த்தகத்தின் அளவு 350 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி அளவு 100 பில்லியன் டாலராகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்துறைக்கு சிறப்பு திட்டங்கள்: இதனை சாத்தியப்படுத்த மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஜவுளித் துறைக்கு அறிவிக்க வேண்டும். குறைந்த வட்டியில் பருத்தி ஏற்றுமதிக்கான கடன்களை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட நிலையான ஜவுளி தயாரிப்புகளுக்கு ஹெச்.எஸ்.என். குறியீடு வழங்க வேண்டும். இது சர்வதேச அளவில் பொருட்களை வகைப்படுத்தவும், வரி விதிப்புகளை முறைப்படுத்தவும் உதவும்.
மறுசுழற்சி செய்யப்படும் பெட் பாட்டில்களின் மூலப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நிலுவையில் உள்ள தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதிகளை வழங்க பட்ஜெட்டில். போதிய நிதியை ஒதுக்க வேண்டும். ஜவுளித்துறையின் திறன் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்நாட்டு ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.