திருவனந்தபுரம்: மத்திய கிழக்கு நாடான குவைத்தின் தெற்கு பகுதியில் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன்.12) அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது. கீழ் தளத்தில் உள்ள வீட்டில் பற்றிய தீ மெல்ல பரவி கட்டடம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இந்த கோர விபத்தில் 42 இந்தியர்கள் உள்பட 49 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த நளினாக்சன் என்பவர் தீ விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பணியாற்று வருகிறார்.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தின் போது அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக் கொண்ட நளினாக்சன் மூன்றாவது மாடியில் இருந்து தரை தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து உயிர் பிழைத்தார். இதில் அவருக்கு வாய் மற்றும் விலா எழும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதையைடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தீ விபத்து சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டு மூன்றாவது மாடியில் இருந்து தரை தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து உயிர் பிழைத்த நளினாக்சன் உறவினர்கள் உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர். அதேநேரம் நளினாக்சனின் நெருங்கிய நண்பர் அதே காசர்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் தீ விபத்தில் மாயமான நிலையில், அவர்து நிலை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.