புதுடெல்லி: அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆண்டு நிகழ்வின் கொண்டாட்டத்தின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு பழைய நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேச உள்ளனர்.
இது குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75ஆவது ஆண்டை முன்னிட்டு பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்வு குறித்து கடிதம் எழுதியுள்ளோம்.
இதையும் படிங்க: "போலி NRI சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை" - மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு வார்னிங்!
இந்த விழாவில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பேச உள்ளதாக அறிந்தோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பான நலன்கள் மற்றும் பாரம்பரியத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த வரலாற்று ரீதியிலான தருணத்தில் இரண்டு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச அனுமதிக்க்கப்பட வேண்டும்,"என்று கூறியுள்ளனர். இந்த கடிதத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, சுப்ரியா சுலே(தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார் பிரிவு), ராகவ் சாதா(ஆம் ஆத்மி கட்சி) உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் அவைத் தலைவர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் இன்று காலை கூடி ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் மீது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.