ஈரோடு : ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வர்கூர் அருணாசலம் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்த மாவட்டம் ஈரோடு. இந்த மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களும் கடந்த அதிமுக ஆட்சியில் தான் வழங்கபட்டது.
திமுக அரசு வந்த மூன்று வருடத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுகவில் இருப்பதே நமக்கு பெருமை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக. குறிப்பாக ரூ.1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை பெற்று தந்தது அதிமுக தான். காவேரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். இலங்கை தமிழர், கச்சத்தீவு பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று உள்ளோம்.
இதையும் படிங்க : "மருத்துவர்கள் யாருமே மகிழ்ச்சியுடன் இல்லை" - அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம்!
2026ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி. அதிமுக ஒன்றும் சாதாரண கட்சி இல்லை. ஒரு தோல்விக்கு பின்னால் மிகப்பெரிய வெற்றியை பெரும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. பென்னாகரம் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு 200 தொகுதிக்கும் மேல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதிமுக.
2026ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்தி மக்களை வஞ்சித்து வருகிறது திமுக.
திமுகவிற்கு மக்கள் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. அரசு ஊழியர்களும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அரசு செய்யாத திட்டங்களை செய்வோம்" என்று பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்