சென்னை: இப்போதிருக்கும் சின்ன சின்ன குழந்தைகள் பல சாதனைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மோக்ஷிதா என்னும் சிறுமி தி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர் 43 அபாகஸ் கணிதத்தை செய்து கொண்டே தமிழில் உள்ள 96 சிற்றிலக்கியங்களின் பெயர்களையும் 1 நிமிடம் 4 நொடிகளில் கூறி கலாம் உலக சாதனையில் இடம் பெற்று, கலாம் நம்பிக்கை விருதை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மோக்ஷிதாவும் அவரது தாயாரும் நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தனர். முதலாவதாக சிறுமி மோக்ஷிதா கூறுகையில், "நான் அபாகஸ் இரண்டு வருடமாக என் தாயாரிடம் பயின்று வருகிறேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. பின்னர், பழகப்பழக எளிதாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக, அபாகஸ் கணிதம் செய்து கொண்டே சிற்றிலக்கியங்கள் கூறுவது மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால், அம்மா அதற்கு மிகவும் உதவியாக இருந்தார். அவர் சொல்ல சொல்ல நானும் வாய்மொழியாக சொல்லி 96 சிற்றிலக்கியங்களையும் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சிற்றிலக்கியங்களின் பெயர்களை பார்த்து சொல்லிப் பழகி அபாகஸ் கணித முறையை செய்தேன். பின்னர் அதுவே பழகிவிட்டது" என்று மகிழ்ச்சிபட தெரிவித்தார்.
இதன் பின்னர் மோக்ஷிதாவின் தாய் ஜமுனா கூறுகையில், "அபாகஸ் செய்வதன் மூலம் ஞாபகத்திறன் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக தான் இதை ஆரம்பித்தேன். ஆனால், உலக சாதனை வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த உலக சாதனைக்கு மோக்ஷிதா வெறும் ஒரு வாரம் தான் பயிற்சி எடுத்தார்.
இதையும் படிங்க: தமிழர் பண்பாட்டைக் கற்க மதுரை வந்த சிங்கப்பூர் மாணவர்கள்.. பாரம்பரிய கலைகளை கற்றுணர்ந்து மகிழ்ச்சி..!
பயிற்சியின்போது ஒரு நாளைக்கு 20 சிற்றிலக்கியங்களின் பெயர்களை ஞாபகம் வைப்பதற்கு சொல்லிக் கொடுத்தேன். ஆனால், ஒரே நாளில் 50 சிற்றிலக்கியங்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால், காதால் கேட்டு அதை மீண்டும் சொல்லி மனப்பாடம் செய்து கொண்டார்.
அதன் பின்னரே, எழுத்துக்கூட்டி எழுதி மனப்பாடம் செய்தார். அபாகஸில் மொத்தம் எட்டு நிலைகள் உள்ளன. அவற்றில் மோக்ஷிதா தற்போது நான்காவது நிலையை முடித்து ஐந்தாவது நிலைக்கு வந்துள்ளார். இவர் அபாகஸ் செய்து கொண்டே சிற்றிலக்கியங்களின் பெயர்களை கூறுவார் என்பதை நான் டியூஷன் சென்டரில் தான் கண்டறிந்தேன்.
ஒருநாள் அபாகஸ் செய்து கொண்டே சிற்றிலக்கியத்தை கூறுங்கள் என்று சொல்லியவுடன் உடனே கடகடவென்று அனைத்தையும் கூறிவிட்டார். அப்பொழுதுதான் மோக்ஷிதாவால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயத்தில் கவனம் செலுத்த முடியும் என்று புரிந்து கொண்டேன். இது எதிர்பாராமல் நடந்ததுதான். மோக்ஷிதாவிற்கு மனித கால்குலேட்டராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
பொதுவாகவே ஏதேனும் கணக்கு கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கால்குலேட்டர் வைத்து கணக்கு போடுவோம், செல்போன் வைத்து பண்ணலாம். அபாகஸ் என்பது அதற்கான விடையை கண்டுபிடிப்பதை மட்டுமல்லாமல் ஞாபக திறன் அதிகரிக்கிறது. இதன் மூலமாக போட்டோக்ராபிக் மெமரி மேம்படும், வாசித்தல், கவனம் செலுத்துதல் மற்றும் கற்று கொள்ளும் திறன் அதிகரிக்கும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்