சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையை விரிவுப்படுத்தவும், புதிய 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கவும் முடிவு செய்து. அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் விரிவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'நகரமயமாதலில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48.45 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை தற்போது மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
இதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கியுள்ளது.
மேலும், 12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேசமுடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் வெளியீடு.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@mkstalin pic.twitter.com/bv00vVi5RR
— TN DIPR (@TNDIPRNEWS) January 1, 2025
இந்நிலையில், நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சி பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர் ஆலோசனைகளின் மேற்கொண்டதன் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை
இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளன. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிர்வாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.' என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.