சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 500 அரசு பள்ளிகளை 2025-26ம் கல்வி ஆண்டில் மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்களை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் எடுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. இதனை அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்தெடுக்கு முயற்சி என விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.' பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்: இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000/= ம் வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இதனால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, திறன் பெற்ற மனிதவளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தத்து கொடுக்கப்படும் என்பது ஊரகப் பகுதியில் அடித்தட்டு மக்களின் கட்டணமில்லா கல்வி பெறும் வாய்ப்பை பறிக்கும் பேரபாயம் கொண்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளிகளில் பெரும்பாலும் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவு மாணவர்கள் தான் பயின்று வருகின்றனர். இங்கு பல வகுப்புகளுக்கு சேர்ந்து ஒரு ஆசிரியர் என்ற முறையில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகின்றது.
இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் 500 பள்ளிகளை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.' என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்…
— K.Annamalai (@annamalai_k) January 1, 2025
அண்ணாமலை கண்டனம்: நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? என்று அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.