தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போக்குவரத்து துறையின் முயற்சிக்கும், வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் புத்தாண்டு சிறப்பாக ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் “நாணயமானவர்களுக்கு நாணயங்கள்” என்ற பெயரில் இன்று (ஜனவரி 1) ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், ஒரு கிராம் வெள்ளி நாணயமும், சாக்லெட் உள்ளிட்டவையும் பரிசாக வழங்கப்பட்டன.
இதில் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 4 நபர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், 21 நபர்களுக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயமும் என 25 நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு பரிசு வழங்கப்பட்டது. இது குறித்து ஹெல்மெட் அணிந்து வந்து தங்க நாணயத்தை பரிசாக பெற்ற சுரேஷ்குமார் என்பவர் கூறுகையில், “ஹெல்மெட் அணிந்ததால் புத்தாண்டு அன்று, தங்க நாணயம் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “தமிழ்த்தாய் வாழ்த்து சரியா பாடுனா பெட்ரோல் இலவசம்” - தஞ்சையில் தமிழ் வளர்க்கும் தொண்டு நிறுவனம்!
இரு சக்கர வாகனம் ஓட்டும்போது அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். நமது உயிர், நமது குடும்பத்தின் உயிர், அனைத்தும் நம் கையில்தான் உள்ளது. ஆகவே கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள்” என்றார்.
மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை புத்தாண்டு தினத்தன்று பரிசாக பெற்று சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது மகிழ்ச்சியை தொண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து வெளிப்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகளான பிரபுராஜ்குமார், ஞானசுந்தரி, ஆர்த்தி உள்ளிட்டோர் மேற்கொண்டிருந்தனர்.