சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, தான் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தில் வழக்கு: இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி பாஜக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மாணவியின் எஃப்ஐஆர் கசிவு; தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாணவியிடம் இருந்து கல்விக் கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது எனவும் கடந்த வாரம் 28ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
கேவியட் மனுத் தாக்கல்: இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி1) கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “அண்ணா பல்கலைக்கழக விவரகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தால், தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என கோரப்பட்டுள்ளது.
இதேபோல் அதிமுக தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள்: முன்னதாக, இந்த சம்பவம் குறித்து அதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பெண்ணின் தனிப்பட்ட அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு: இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு மாணவிகளின் நலனை காக்க கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, கூடுதலாக பாதுகாவலர்களை நியமிக்க கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.