ஸ்ரீநகர்:30 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்துக்குப் பிறகு முதன் முறையாக காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தரமாக குடியிருக்க விரும்பும் வகையில் ஸ்ரீநகரில் வீட்டு வசதி சங்கத்தை பதிவு செய்து அரசிடம் ஏற்ற விலையில் நிலம் அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுடைய மறுவாழ்வுக்கான அரசின் திட்டங்கள் நீண்டகாலமாக தாமதம் ஆவதை அடுத்து அதிருப்தியில் இருந்த காஷ்மீர் பண்டிட்டுகள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளரிடம், இடம்பெயர்ந்தோருக்கான காஷ்மீரி குடியிருப்பாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், ஸ்ரீநகர் என்ற பெயரில் காஷ்மீர் பண்டிட்டுகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய இந்த சங்கத்தின் செயலாளர் சதீஷ் மஹல்தார், "தனிப்பட்ட டவுண்ஷிப் பகுதிகளில் தனிமையாக வாழ்வதற்கு பதில் குடிபெயர்ந்தவர்கள், இஸ்லாமிய மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான முயற்சிதான் இது,"என்றார். இந்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 11 காஷ்மீர் பண்டிட்கள், 2 சீக்கியர்கள் உள்ளனர். 1989ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில சிறுமான்மையினருக்கு எதிராக கொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இவர்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்தனர்.
பண்டிட்களுக்கான மறுவாழ்வு தேர்தல் ஆதாயத்துக்கானதா?:இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மஹல்தார் ,"காஷ்மீருக்கு எங்கள் சமூகத்தினர் திரும்பியது குறித்து முழுவதும் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆதாயங்களுக்காக அரசியலாக்கப்பட்டது. எங்கள் சமூகம் திரும்பி வந்ததைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் கள அளவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு 419 குடும்பத்தினர் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்பி வருவதாக மத்திய அரசிடம் பட்டியல் தரப்பட்டது. ஆனால், அதன் பேரில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை," என்றார்.
மேலும் பேசிய அவர், "கடந்த 4-5 ஆண்டுகளாக இயல்பு நிலை திரும்பி விட்டதாக அரசு சொல்கிறது. எனவே நாங்கள் இப்போது முன்னர் நாங்கள் குடியிருந்த இடங்களுக்கு திரும்ப விரும்புகிறோம். ஆனால், எங்களில் பலர் அவர்கள் நிலத்தை, வீடுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே விற்று விட்டனர். ஆகவே ஏற்றவிலையில் அரசு நிலங்களை தர வேண்டும் என்று கோரி வீட்டு வசதி சங்கத்தை உருவாக்கி இருக்கின்றோம்.
உதாரணமாக, 12.5 ஏக்கர் நிலம் கேட்டிருக்கின்றோம். அதன் பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி மனைகளாக பிரிக்க வேண்டும். ஒரு சமுதாய கூடமும் அமைக்க உள்ளோம். இதனை இப்போது ஸ்ரீநகரில் தொடங்கி உள்ளோம். இதன் பின்னர் கிராமங்களிலும் இந்த திட்டத்தை விரிவு படுத்த உள்ளோம். அனைத்து சமூகங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த காஷ்மீரிகளை இதில் சேர்த்துக் கொள்கின்றோம்," என்றார்.