பெங்களூரு:மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அமித் திக்வேகர், கேடி நவீன் குமார், சுரேஷ் எச்எல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன் நாயக்கிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இதே வழக்கில் கைதான அமித் திக்வேகர், கேடி நவீன் குமார், சுரேஷ் எச்எல் ஆகியோர் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மூன்று பேரின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அருண் ஷியாம், மதுக்கர் தேஷ்பாண்டே, பசவராஜா சப்பன்னவார் ஆகியோர் வாதிட்டனர்.
மனு நீதிபதி எஸ் விஷ்வஜித் ஷெட்டி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஏறத்தாழ 6 ஆண்டுகளாக மூன்று பேரும் சிறையில் உள்ளதாலும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததையும் குறிப்பிட்ட நீதிபதி மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதே காரணத்தை குறிப்பிட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன் நாயக் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில் 527 பேரை சாட்சியங்களாக போலீஸ் சேர்த்து உள்ளது. இருப்பினும் அவர்களில் வெறும் 90 பேரிடம் மட்டுமே போலீசர் இதுவரை விசாரணை நடத்தி உள்ளனர்.