2024ம் ஆண்டில் மக்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. பாரம்பரிய உணவுகள் முதல் காக்டெய்ல் வரை அடங்கும் இந்த பட்டியலில் இருக்கும் முதல் 10 உணவுகள் எவை என்பதை பார்ப்போம்.
கூகுளில் முதல் 10 இடத்தை பிடித்த ரெசிபிக்கள்:
1. பார்ன் ஸ்டார் மார்டினி (Porn Star Recipe)
2. மாங்காய் ஊறுகாய் (Mango Pickle Recipe)
3. தனியா பன்ஜாரி (Dhaniya Panjiri)
4. யுகாதி பச்சடி (Ugadi Pachadi)
5. சர்னாமிரிட் (Charnamrit)
6. இமா தட்சி (Ema Datshi)
7. ப்ளாட் வொயிட் (Flat White)
8. கஞ்சி (Kanji)
9. சங்கர்பளி (Shankarpali)
10. சம்மந்தி (Chammanthi)
உலகம் முழுவதும் உள்ள உணவுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த மாங்காய் ஊறுகாய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் பிடித்த மாங்காய் ஊறுகாயை பக்குவமாக எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- மாங்காய் - 5 (1 1/2 கிலோ)
- கல் உப்பு - 1/2 கப்
- கடுகு - 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 கப்
- வறுத்து பொடியாக வைத்துள்ள கட்டி பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் தாளிக்க தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 1 1/2 கப்
- கடுகு - 1 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் ஊறுகாய் செய்முறை:
- மாங்காயை நன்கு கழுவி டிஸ்யூ அல்லது துணியால் ஈரப்பதத்தை துடைத்து, நறுக்கி வைக்கவும்.
- இப்போது, நறுக்கி வைத்த மாங்காயை மண் பாத்திரம், பீங்கான் பாத்திரம் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் சேர்க்கவும். (எவர் சில்வர் அல்லது அலுமினிய பாத்திரத்தில் ஊறுகாய் செய்தால் சீக்கிரமாக வீணாகிவிடும்)
- இப்போது இதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்ச நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள்.
- இதற்கிடையில், மாங்காய் ஊறுகாயிற்கு தேவையான மசாலா தயார் செய்யலாம்...அதற்கு, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்து வரும் வரை வறுக்கவும்.
- அதனுடன், இடித்து வைத்துள்ள பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும். பின்னர், அடுப்பை அணைத்து சூடு ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளுங்கள்.
- அடுத்ததாக, உப்பு சேர்த்துள்ள மாங்காயில் மிளகாய் தூள், நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து 5 நிமிடங்களுக்கு தனியாக வைத்து விடுங்கள்.
- இப்போது, ஊறுகாய் தாளிப்பதற்கு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- இறுதியாக, இந்த எண்ணெயை ஊறுகாயில் சேர்ப்பதற்கு முன், மஞ்சள் பொடியை எண்ணெயில் சேர்த்து மாங்காயில் ஊற்றவும். இப்போது நன்கு கிளறி, சூடு ஆறியதும் மூடி போட்டு மூடி வைக்கவும்.
- இரண்டு நாட்களுக்கு இந்த பாத்திரத்தை வெயிலில் வைத்தால், எண்ணெய் நன்கு பிரிந்து வந்திருக்கும். பின்னர், ஊறுகாயை ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 6 மாதங்கள் வரை கெடாமலும், சுவை மாறாமலும் இருக்கும்.
இதையும் படிங்க:
பஞ்சு போன்ற இட்லிக்கு அரை கப் 'இதையும்' ஊற வைத்து அரைங்க..புசுபுசு இட்லிக்கு நாங்க கேரண்டி!
மீதமான சாதத்தில் 'மொறு மொறு வடை'..5 நிமிடம் இருந்தால் சுடச்சுட ஸ்நாக்ஸ் ரெடி!