பெங்களூரு:கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு, தர்ஷனின் ரசிகையான சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயதான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி, தனது ரசிகரான ரேணுகா சுவாமியை, தர்ஷன் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூன் 11ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், ஜாமீன் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணையின் போது அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த பெங்களூரு நீதிமன்ற நீதிபதி, தர்ஷனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தர்ஷன் தரப்பில் உடல் நலக் காரணங்களை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஷெட்டி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள பல்லாரி மத்திய சிறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் ஆகியோரிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கவரில் தர்ஷனின் மருத்துவ அறிக்கைகளை அரசு சமர்ப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக தர்ஷன் தரப்பில், "தர்ஷனின் இரு கால்களிலும் உணர்வின்மை இருப்பதால், மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு அனுமதித்து ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டது.